திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யூ மாநிலத் தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமை வகித்தார். பொன்மலை கோட்ட பொதுச்செயலாளர் வீரசேகரன் முன்னிலை வகித்தார். இதில், ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜா ஸ்ரீதர் பேசுகையில், ”ரயில்வேத் துறை இரண்டு ரயில்களை ஐ.ஆர்.சி.டி.சி வசம் ஒப்படைத்து கார்ப்பரேஷனாக மாற்ற முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ஏர் இந்தியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
அவுட்சோர்சிங் என்ற முறையைக் கொண்டு வந்து அனைத்து பணிமனைளையும் மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வே தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அடித்தட்டு மக்களுக்கும், பயணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அது எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. மாநில கொள்கைகள் இதற்கு எடுபடாது.
55 வயதைக் கடந்தவர்கள் விருப்ப ஓய்வில் அனுப்பும் சட்டம் 60 ஆண்டுகளாக உள்ளது. தற்போது அதை மோடி அரசு அமல்படுத்துகிறது. அவர்களின் நோக்கம் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதுதான்” என்றார்.