திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளின் ஒருபகுதியாக நேற்று நம்பெருமாள், காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்தன மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் கண்டருளிய நம்பெருமாள், இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
பின்னர் மூலஸ்தானத்திலிருந்து இரவு 8 மணிக்கு இரண்டாம் புறப்பாடாக கதிர் அலங்காரம் எனப்படும் மூலிகைகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி, சக்கரத்தாழ்வார் சந்நிதியை வந்தடைந்தார். அங்கிருந்து தீபமானது கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் 20 அடி உயரத்தில் பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை வலம் வந்து கொளுத்தப்பட்டது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: வெண்குன்றம் மலை மீது சுடரொளி வீசிய கார்த்திகை தீபம்!