தமிழ்நாடு முழுவதும் குளிர்காலம் தொடங்கியுள்ளதையொட்டி டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் பல இடங்களில் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ள நிலையில், இந்த முகாம்களில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு கூறப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பாக ஆட்சியர் அலுவலக அலுவலர்களுக்காக டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் நிலவேம்பு சூரண பொடி வழங்கப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் கூறுகையில், ''மழைக்காலத்தில் பரவும் விஷ காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் வகையில் நிலவேம்பு சூரண பொடி இந்த முகாமில் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு நோயில்லா வாழ்க்கை வாழ வேண்டும்'' என்றார்.
இதையும் படிக்கலாமே: வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் - பொதுமக்கள் பீதி