திருச்சி: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும், போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார்.
அந்த வகையில், போதைப் பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிடும் நோக்கில், காவல் துறையினரும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் அவ்வப்போது பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (நவ.27) திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி தலைமையில் காவல்துறை அதிகாரிகளும், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையினரும் இணைந்து திருச்சி மாநகரில் பல இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது, காந்தி மார்க்கெட் தஞ்சை சாலை பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்ததையடுத்து, கடையில் இருந்த குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, மாநகர காவல் துறை ஆணையர் காமினி முன்னிலையில் அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
அதேபோல மலைக்கோட்டை தேவதானம் பகுதியில் உள்ள ஒரு கடையிலும், பீமநகர் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையிலும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, அந்த கடைகளுக்கும் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநகர காவல் துறை ஆணையர் காமினி, “அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதையும் மீறி யாரேனும் குட்கா, புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தால், அவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த போதைப் பொருட்களை மொத்த வியாபாரம் செய்பவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறோம். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். குட்கா, புகையிலை விற்பனை செய்தது தொடர்பாக 2023ஆம் ஆண்டில் மட்டும் 795 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உடற்பயிற்சி கூடங்களில் விற்கப்படும் பவுடர்களை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சாப்பிட வேண்டாம்: மருத்துவர் கூறும் அறிவுரை என்ன?