திருச்சி: சென்னையை அடுத்து வளர்ந்துவரும் பெருநகரமாக 'திருச்சி' திகழ்ந்து வருகிறது. மேலும் திருச்சியில் நாளுக்கு நாள் விமான பயணிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, திருச்சி விமான நிலையத்தை விரிவுபடுத்த முடிவு செய்து, புதிய விமான நிலைய முனையம் கட்ட, இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் 951 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
இந்த விமான நிலைய முனைய கட்டுமான பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், 249 கோடி ரூபாய் கூடுதலாக செலவு செய்யப்பட்டு, ஆயிரத்து 197 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.2) திருச்சிக்கு வருகை தர உள்ளார். மேலும், பாரதிதாசன் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பிரதமர் நிகழ்ச்சிகள்: டெல்லியில் இருந்து தனி விமானத்தில் காலை 7 மணிக்கு புறப்படும் பிரதமர் மோடி, காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் சாலை மார்க்கமாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்று, அங்கு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 33 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக நண்பகல் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் அவர், விமான நிலைய புதிய முனையத்தை 15 நிமிடங்கள் பார்வையிட்டு, விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் புதிய முனையம் முன்பு 10 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு சென்று அங்கிருந்து, ஆயிரத்து 197 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய முனையம் மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் சார்பில் செய்து முடிக்கப்பட்ட பல்வேறு திட்டப்பணிகளை திறந்துவைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.
மேலும், சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அரசின் சாதனைகள் குறித்து மக்கள் மத்தியில் 20 நிமிடங்கள் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, மதியம் 1 மணியளவில் தனி விமானத்தில், லட்சத்தீவுகள் சென்று, அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இதையொட்டி திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவற்றை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் (SPG) கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து, நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனைகளை நடத்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து விமானம் நிலைய புதிய முனையம், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கம் முழுவதும் தமிழக போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு: திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையில் உள்ள நுழைவு வாயில் முதல் புதிய முனையம் வரை மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகு காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே நபர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரையிலான சுமார் 11 கி.மீ தூரத்துக்கு இருபுறத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விழாக்கள் நடைபெறும் இடம் மற்றும் வழித்தடத்தில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை செய்து வருகின்றனர். பிரதமர் செல்லும் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு 8 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அரசு மற்றும் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு: திருச்சி வருகை தரும் பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் தமிழக ஆளுநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர். இதேபோல, பாஜக சார்பில் 10 இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் பிரதமர் மற்றும் கட்சி நிர்வாகிகளை வரவேற்று கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது.
சாலையின் இருமார்க்கத்திலும் பிரதமர் வருகையின் போது, இடையூறு ஏற்படாத வகையில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 இடங்களில் அலங்கார நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விழாவுக்கான முன்னேற்பாடுகளை விமான நிலைய ஆணையக்குழும அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சியில் புத்தாண்டு கொண்டாட்டம்.. அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அபராதம்..!