திருச்சி மேலப்புதூர் பகுதியில் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் காலாண்டு தேர்வு முடிவடைந்து இதற்கான மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது. இதற்காக மாணவிகள் தங்களது பெற்றோருடன் நேரில் வருமாறு பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.
இன்று காலை முதல் மாணவிகள் தங்களது பெற்றோருடன் பள்ளிக்கு வந்து மதிப்பெண் பட்டியலை பெற்றுச்சென்றனர். அப்பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தந்தையுடன் மதிப்பெண் பட்டியல் வாங்க வந்துள்ளார். அப்போது தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ஆசிரியைகள் மாணவியை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி பள்ளியின் இரண்டாவது மாடிக்கு ஓடிச் சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் படுகாயம் அடைந்த மாணவி உயிருக்கு போராடிபோது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மாணவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் தற்கொலை முயற்சி குறித்து பாலக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல் தற்கொலையில் உதிர்ந்த சோகம் !