தமிழ்நாட்டில் உள்ள சக்தி வாய்ந்த வழிபாட்டுத் தலங்களில் முதன்மை தளமாக திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்திரைப் பெருந்திருவிழா.
ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி வாரம் பூச்சொரிதல் விழா தொடங்கி பங்குனி கடைசி வாரம் வரை 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது வழக்கம். பக்தர்கள் நலனுக்காக அம்மனே விரதம் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
இந்நாட்களில் அம்மனுக்கு நெய்வேத்தியமாக துள்ளுமாவு, நீர்மோர், பானகம், கரும்பு, பழ வகைகள் மட்டுமே நெய்வேத்தியம் செய்யப்படும்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு அம்மன் கேடயத்தில் புறப்பாடு திருவீதி உலா வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சேர்ந்தார். தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அம்மன் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், மர குதிரை வாகனம், வெள்ளி குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. இதில் லட்சகணக்கான மக்கள் கலந்துகொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் காலை பகல் 11.07 மணிக்கு மிதுன லக்னத்தில் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலையில் இருந்து புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து நிலையை அடைந்தது.
இந்நிகழ்ச்சியொட்டி ஏராளமானோர் சமயபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் அன்னதானம் வழங்கினர். திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் லட்சக்கணக்கில் திரண்டு இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சுமார் 58 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி இந்நிகழ்ச்சியைக் கண்காணித்தனர். மேலும் 75 இடங்களில் குடிநீர் வசதியும், துப்புரவு பணிகளை மேற்கொள்ள 110 தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.