திருச்சி மாவட்டம் குமரேசபுரத்தைச் சேர்ந்த ரவுடி கருப்பையா(32), திங்கட்கிழமையன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது காரில் வந்த கும்பல், அவரை சரமாரி வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றது. இதுகுறித்து திருவெறும்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கொலை செய்த கும்பலை கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் காவல்துறையினர் காருடன் மடக்கி பிடித்தனர்.
காரில் இருந்த நவல்பட்டு குருபாகரன்(46), இவரது மனைவி நித்யா(40), கார்த்தி(23), சசிகுமார்(22), சுரேஷ்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், நித்யா திருச்சி மன்னார்புரம் மின்சார வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்பது தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட கருப்பையா தனது சொந்த ஊரான கள்ளபெரம்பூரில் மீன் பண்ணை நடத்தி வந்துள்ளார்.
இந்தப் பண்ணையில் குருபாகரன் பங்குதாரராக இருந்துள்ளார். மீன் பண்ணையை மூடிய போது குருபாகரனுக்கு, கருப்பையா பங்கு தொகையை பிரித்து தரவில்லை. அதோடு குருபாகரனின் காரையும் கருப்பையா விற்று பணம் தராமல் மோசடி செய்துள்ளார். இதனால், ஏற்பட்ட விரோதம் காரணமாக குருபாகரன், அவரது மனைவி நித்யா ஆகியோர் திட்டமிட்டு கருப்பையாவை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.