திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து துறையூர் செல்லும் ரோட்டில் அமேசான் நிறுவனத்தின் டெலிவரி பாயிண்ட் கடை அமைந்துள்ளது. பொதுமக்கள் அமேசான் நிறுவனத்தின் மூலம் ஆர்டர் கொடுத்து வாங்கும் பொருட்கள் முசிறிக்கு வந்து பின்னர் வாடிக்கையாளர்கள் கூறியுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
நேற்று கடையில் டிவி போன் உள்ளிட்ட பல்வேறு உயர்தரப் பொருட்கள் இருந்தது. அமேசான் டெலிவரி மையத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். காலை அமேசான் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து இருப்பதாக மேனேஜருக்கு தகவல் சென்றது. இதையடுத்து அவர் வந்து பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த 2.50 லட்சம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து அமேசான் டெலிவரி மைய மேலாளர் முசிறி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது நள்ளிரவு 2 மணி அளவில் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கல்லாவில் வைத்திருந்த பணத்தை திருடிச் செல்வது பதிவாகியுள்ளது.
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதற்காக வைத்திருந்த பொருட்கள் எதையும் எடுக்காமல் பணத்தை மட்டும் திருடிச் சென்றுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: எத்தனை தடவைதான் சோதனை நடத்தவீங்க!- சிபிஐ சோதனையை கலாய்த்த கார்த்தி சிதம்பரம்!