திருச்சி மாநகராட்சி 63ஆவது வார்டுக்குட்பட்ட நியூடவுன் எஸ்ஏஎஸ் நகரில் பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அந்தப் பகுதியில் பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 40 அடி நீளம், 20 அடி அகலம், 30 அடி ஆழத்தில் பெரிய குழி தோண்டப்பட்டு வருகிறது. இந்த நீரேற்று நிலையம் அமைய உள்ள பகுதியில் வீடுகள் அதிக அளவில் உள்ளன. புதியதாக அமைக்கப்பட இருக்கும் கழிவு நீரேற்று நிலையத்தில் கழிவுநீரை சேகரிக்கும்போது சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அந்த பகுதி முழுவதும் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளதாகவும், இதனால் அவ்வப்போது மர்மக் காய்ச்சலலால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
கழிவு நீரேற்று நிலையம் அமைத்தால் கொசுத்தொல்லை மேலும் அதிகரிக்கும் என்றும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்பதால் கழிவு நீரேற்று நிலையத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட திருவெறும்பூர் நியூடவுன் மற்றும் எஸ்ஏஎஸ் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து மனுவை அளித்தனர். இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு அரசும், மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.