திருச்சி: பிச்சாண்டார் கோவில் அடுத்து வாளாடி ரயில் நிலைய முன்பாக ரயில் தண்டவாளத்தின் நடுவே இரண்டு டயர்கள் இருந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்னைக்கு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ரயில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் வந்தபோது இன்ஜினை இயக்கி வந்த ஓட்டுநர் தண்டவாளத்தில் லாரி டயர்கள் இருப்பதைக் கண்டு சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியுள்ளார். ஆயினும் ரயில் இன்ஜின் பழுது ஏற்பட்டு 4 பெட்டிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனை அடுத்து ரயில் ஓட்டுநர் டயர்களை அப்புறப்படுத்தி இன்ஜினை சரி செய்து 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டது. இது குறித்து ரயில் ஓட்டுநர் விருத்தாச்சலம் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 3 ஆம் தேதி காலை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் சென்று ஆய்வு செய்து தமிழக காவல்துறை சார்பில் 2 தனிப்படையும், ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையம் சார்பில் 2 தனிப்படை, ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் 1 தனிப்படை என 5 தனிப்படைகள் அமைத்து யார் குற்றவாளிகள் என தேடி வந்தனர்.
குற்றவாளியை பிடிப்பதில் தோய்வு ஏற்பட்டதால் மேலும் ஒரு தனிப்படை அமைத்து, மோப்பநாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் விசாரணையில் லாரி டயரின் உரிமையாளர், அதே பகுதியை சேர்ந்த கலையரசன் என தெரியவந்தது. அவரை விசாரணை செய்ததில் அவருக்கும் இந்த டயர் தண்டவாளத்தில் வைத்ததற்க்கும் சம்பந்தம் இல்லை என்றும், யாரோ எடுத்து வைத்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் 30க்கும் மேற்பட்டோரிடம் செல்போன் டவர் தொலைபேசி எண் சிக்னலை வைத்து விசாரணை செய்து வந்தனர். அதில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக ஓட்டுநர் வாஞ்சிநாதன் என்பவரை விசாரணை அழைத்தபோது அவருக்குத் தெரிந்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்த பின் அவரை விடுவித்தனர்.
இதனை அடுத்து லால்குடி பின்னவாசல் பகுதியில் டாஸ்மாக்கில் பணிபுரியும் வெங்கடேசனை விசாரணை செய்த போது, கடந்த இரண்டாம் தேதி இரவு 11 மணிக்கு மேல் வீட்டிற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்ததாகவும், அந்த சமயத்தில் டயர்கள் இருந்த இடத்தில் பிரபாகரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தாகவ தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டிற்கு போகும் வழியில் அவர்களைக் கண்ட வெங்கடேசன் எதற்காக இந்த நேரத்தில் இங்கு மது அருந்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்டதற்கு, ரயில்வே துறையினர் பெரியார் தெருவில் சாலை போடுவதற்கு தடையாக இருப்பதற்காகவும் மற்றும் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது அபராதம் விதிப்பதற்காகவும் அவர்களை பழிவாங்குவதற்காக இங்கு இருக்கும் 2 டயர்களை தண்டவாளத்தின் நடுவில் போட உள்ளோம் என்று கூறியுள்ளனர்.
மேலும் வெங்கடேசனும் அதே பகுதியில் தான் வசிப்பவர் எனபதனால் அவரையும் டயர்களை தண்டவாளத்தில் போடுவதற்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் வெங்கடேசன், பிரபாகரன், கார்த்திக் ஆகிய 3 பேர் டயர்களை உருட்டி தண்டவாளத்தில் வைத்ததாக வாக்குமூலம் அளித்துளார். வெங்கடேசனின் வாக்குமூலத்தின் பெயரில் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து ரயில்வே மத்திய மண்டல இருப்பு பாதை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் செய்தியாளரிடம் கூறும் போது, “30 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்தோம். சுரங்க பாலம் சரியான இடத்தில் கட்டவில்லை, முறையாக சாலை வசதி இல்லை என்று அரசின் கவனத்தை ஈர்க்க இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என வாக்குமூலம் அளித்தனர்.
ரயில் போக்குவரத்து என்பது வெகுஜன மக்கள் அதிகம் பயன்படுத்த கூடியது. எனவே மக்கள் கெட்ட என்னத்துடன் செயல்பட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ரயிலை கவிழ்க்க திட்டம் என்கிற அடிப்படையில் இவர்கள் மூன்று பேர் மீதும் கடுமையான தண்டனை, நடவடிக்கை இருக்கும். சென்னை, திருச்சியில் கஞ்சா தடுப்பு வேட்டையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் 764 கிலோ கஞ்சா பிடித்துள்ளதாகவும், 116 நபர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வைத்த வழக்கில் 8 பேரிடம் விசாரணை!