திருச்சி: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை தொடக்க விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை, தமிழகம் என அழைக்க வேண்டும் எனக் கூறிய கருத்தின் உட்பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பிரிவினை வாத கருத்துகள் அதிகம் வர ஆரம்பித்துள்ள நேரத்தில், தமிழ்நாட்டை தனி நாடு என எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற அர்த்தத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்'' என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
மேலும் அவர், ''நான் தமிழ்நாட்டைச் சார்ந்தவள், என் மொழி தமிழ் மொழி, என் மாநிலம் தமிழ்நாடு, என் நாடு பாரத தேசம். ஆளுநர் அவரின் கருத்துக்களை கூறக்கூடாது என சொல்ல முடியாது. தமிழ்நாட்டின் சில நிகழ்வுகளைப் பார்த்து அவர் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்" என்றார்.
பாரதிய ஜனதா கட்சியுடன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைய உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், "நானும் ஜி.கே.வாசனும் இந்நிகழ்ச்சியில் இணைந்துள்ளோம். ஏனென்றால், நான் ஆளுநராக உள்ளேன், அவர் இசை ஆர்வலராக உள்ளார்.
ஆளுநரும் ஆர்வலரும் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளோம். நாட்டில் எல்லா மதங்களும் இணையாக மதிக்கப்பட வேண்டும். மதவாதத்தை எதிர்க்கிறோம். மதத்தை எதிர்க்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
ஆனால், மதத்தை விவாதப் பொருளாக ஆக்கியவர்கள் யார் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் செயல்பாடு குறித்து ரிப்போர்ட் கார்டு கொடுக்கும் நபர் தான் இல்லை'' என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகள் இதுதான் - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!