திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள பகவான் பட்டியைச் சேர்ந்தவர் ராம்கி (22). இவர் கவரப்பட்டியைச் சேர்ந்த தனது மாமன் மகள் முறை கொண்ட இளம்பெண்ணை கடந்த ஓராண்டிற்கும் மேலாக காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணுடன் அவ்வப்போது தனிமையில் நெருங்கி பழகி வந்ததால் ஐந்து மாதம் கர்ப்பமான பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளைஞரை வற்புறுத்தியுள்ளார்.
இதனை ஏற்க மறுத்து தலைமறைவான ராம்கியை கைது செய்யக்கோரி, அப்பெண் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.
இந்நிலையில் இதுவரை சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது பெற்றோர்களுடன் காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா, தலைமறைவாக இருக்கும் இளைஞரை இன்னும் இரண்டு நாள்களில் கைது செய்வதாக கூறியதையடுத்து, பெண்ணின் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். தனது பெற்றோர்களுடன் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.