திருச்சி: ஶ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் அருகேயுள்ள அழுந்தூா் பகுதியில் கடந்தாண்டு ஏப்ரல் 18ஆம் தேதி இரவு புது லாரி டயா்கள் மற்றும் டிஸ்க்குகளை ஏற்றி வந்த லாரியை, அதன் ஓட்டுநா் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கச் சென்றாா். மறு நாள் காலை பாா்த்தபோது, லாரியில் இருந்த 13 புது லாரி டயா்கள் மற்றும் 13 டிஸ்க்குகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 6.24 லட்சம் ஆகும். இது தொடா்பாக மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மணிகண்டம் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் 2023 ஜனவரி 8ஆம் தேதி, அதே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லாரியிலிருந்து ரூ. 3.10 லட்சம் மதிப்பிலான 12 புதிய டயா்கள் திருடுபோயின. இது தொடா்பாகவும் மணிகண்டம் போலீசாா் விசாரித்தனா். திருவெறும்பூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) அறிவழகன் உத்தரவின்பேரில், திருவெறும்பூா் உட்கோட்ட தனிப்படை காவல் ஆய்வாளா் கமலவேணி தலைமையில், தலைமைக் காவலா்கள் முத்துகிருஷ்ணன், அருண்மொழிவா்மன், இன்பமணி, தனசேகரன், மற்றும் முதல் நிலைக் காவலா்கள் ராஜேஷ், இளையராஜா அறிவழகன் மற்றும் முத்துக்கருப்பன் ஆகியோா் அந்தப் பகுதியில் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.
அப்போது இந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு ஆய்வு செய்ததில், குறிப்பிட்ட ஒரு லாரி அந்த பகுதியில் நீண்ட நேரம் நின்று சென்றதும், அந்த லாரியை திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், ஆலங்காயம், கல்லறைப்பட்டியைச் சேர்ந்த சி.கோவிந்தன் (48) என்பவர் ஓட்டியதும் தெரியவந்தது. அவரை பிடித்து நடத்திய விசாரணையில் லாரி டயா்களை அவா் திருடியது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தனை தனிப்படை போலீசார் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து சுமாா் ரூ. 9 லட்சம் மதிப்பிலான லாரி டயா்களையும் மீட்டனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனா். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநர் கோவிந்தன், இதற்கு முன் வேறு எதுவும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா எந்த நோக்கத்திற்காக லாரி டயர்களைத் திருடினார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.