திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொய்கை மலைவனப்பகுதியில் குரங்குகள் அதிகமாக வாழ்ந்துவருகின்றன. இந்த குரங்குகளுக்கு வனப்பகுதியில் கோடை காலத்தில் தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் தண்ணீருக்காகத் தேடி அலையும் குரங்குகள் மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் சுற்றித் திரிந்துவருகிறது.
மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் செல்லும் வாகனங்களுக்குக் கூட இவைகள் சிலநேரம் தொந்தரவாக இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் இன்று கூட்டமாக வனப்பகுதியில் இருந்த குரங்கு கூட்டத்திலிருந்து ஆறு மாத குரங்குக் குட்டி ஒன்று வெயில் தாக்கத்தால், மரத்திலிருந்து மயங்கி சாலையில் விழுந்தது. இதனையடுத்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் குரங்குக் குட்டியைக் காப்பாற்றி அதற்கு தண்ணீர், சாத்துக்குடி பழச்சாறுகள் கொடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை வனத் துறையினர், குரங்குக் குட்டியை வனத் துறை அலுவலகத்திற்கு எடுத்துச்சென்று அங்கு பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.
கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பமாகியுள்ள நிலையில், காட்டுப் பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், மக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்தால் அவதியுற்றுவருகின்றனர். இந்நிலையில், மனிதர்கள் மட்டுமில்லை, விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. வன விலங்குகள் கோடை தாக்கத்தால், வனப்பகுதியிலிருந்து வெளியே தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அலைந்துவருகிறது. அவைகளுக்கு வனப்பகுதிக்குள்ளேயே, குடிக்கத் தண்ணீர் தொட்டி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் வனத் துறையினருக்குக் கோரிக்கைவைத்துள்ளனர்.