திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இடையப்பட்டியைச் சேர்ந்து பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு நூறுநாள் வேலை தரக்கோரி ஊராட்சி செயலரிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த புத்தாநத்தம் காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், தங்கள் பகுதிக்கு கடந்த ஆறு மாதங்களாக நூறு நாள் வேலைவாய்ப்பு வழங்கவில்லை. அதே போல் நான்கு மாதங்களாக குடிநீரும் வரவில்லை. துப்புரவு வேலை எதுவும் முறையாக செய்யவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை காவல் துறையிடம் தெரிவித்தனர்.
இது பற்றி ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் அளித்தும் அவர் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதால் தான் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். காவல் துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிட்டனர்.