திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருமலையில் உள்ள கோவில் தெரு பகுதியில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் புதிதாகக் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கல்லுப்பட்டியில் தண்டலாக வேலை பார்த்துவரும் அய்யப்பன் என்பவர் குடிநீர் குழாயில் வீணாகும் தண்ணீர், அருகில் இருக்கும் தனது நிலத்துக்குள் வருவதாகக் கூறி, அந்த குடிநீர் குழாயை உடைத்தாகக் கூறப்படுகிறது.
இதனால், கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய கோவில் தெருவைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் குடிநீர் குழாயை உடனடியாகச் சீரமைத்துத் தரக்கோரி காலிக்குடங்களுடன் மணப்பாறை - மதுரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த புத்தாநத்தம் காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து, மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்துச் சென்றனர்.
இதையும் படிங்க: 'பாவம்ப்பா... இந்த காக்கா... குருவிகள் எல்லாம்' - பொம்மலாட்டத்தில் அசத்திய மழலைகள்