திருச்சி மாவட்டம் கல்லுக்குழி அருகே உள்ள முடுக்குபட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மீராபாய். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இளைய மகன் கணேசமூர்த்தி(34) கோவையில் ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றி வந்தார். தற்போது அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு குவைத் செல்வதற்காக ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இருந்தும் குணமாகவில்லை.
பின்னர், கடந்த 22ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருந்தது தெரியவந்தது. பின்னர், அவர் உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் கணேசமூர்த்தியின் தந்தை நாகராஜன், பழச்சாறு வாங்குவதற்காக கடைக்குச் சென்றுள்ளார். இந்நேரத்தை பயன்படுத்திகொண்ட கணேசமூர்த்தி, மருத்துவமனையில் உள்ள 6ஆவது தளத்திற்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கணேசமூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறுகையில்;
கணேசமூர்த்திக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அடுத்த ஒரு சில நாட்களில் வீட்டிற்குச் செல்லும் நிலை இருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை, மாடியில் தண்ணீர் திறப்பதற்காக கதவு திறக்கப்பட்டு இருந்த சமயத்தில் கணேசமூர்த்தி மாடிக்கு சென்று கீழே குதித்துள்ளார்.
அவர் உள்நோயாளியாக இருந்தபோது உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்துவந்த நிலையில் அவர் இந்த தவறான முடிவை எடுத்துள்ளார். அவர் மனதளவில் நோய் குணமாகவில்லை என்று எண்ணி, விரக்தியில் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனைவி மாயமான சோகம்: விபரீத முடிவை எடுத்த கணவர்!