திருச்சி: பாலக்கரை இரட்டைப் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் (91) - சம்பூரணத்தம்மாள் (86) தம்பதி. இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். கிருஷ்ணன் மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரிலுள்ள மகன் வீட்டிலும், சம்பூரணத்தம்மாள் திருச்சி காட்டூரில் உள்ள மற்றொரு மகன் வீட்டிலும் இருந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று (நவ. 25) அதிகாலை 5.30 மணிக்கு சம்பூரணத்தம்மாள் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரில் உள்ள வீட்டில் வைப்பதற்காக, குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணனும் உயிரிழந்தார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, கிருஷ்ணன், சம்பூரணத்தம்மாள் உடல்கள் அருகருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த உறவினர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இருவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மனைவி இறந்த சிறிது நேரத்தில் கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கனவில் பாம்பு வந்ததால் பரிகார பூஜை..! நாக்கை கடித்த பாம்பு..! ஈரோட்டில் விபரீதம்..!