திருச்சியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமுமுக மாநில தலைவர் ஜவாஹிருல்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பின்னர் ஹைதர் அலி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் கழகத்தின் விதிமுறைகளுக்கு மாறாக நாடந்துகொள்கிறார். கஜா புயல் நிவாரணத்துக்கு வசூலிக்கப்பட்ட நிதிக்கான கணக்குகள் முறையாக சமர்பிக்கவில்லை. எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது முடிவுக்கு வரும் வரையில் அவர்கள் மேற்கொண்டு பணிகளை மேற்கொள்ள கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு மக்கள் நலன் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். சிறுபான்மை முஸ்லிம்கள் மீது மதத்தின் பெயரால் அடித்து துன்புறுத்துவது, கொலை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், இதற்கு நடவடிக்கை எடுக்காமல் அரசுகள் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் சட்டங்களை கடுமையாக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.