திருச்சியில் 51 பேர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். இதில், 37 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீதமுள்ள 14 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதற்கிடையில், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஏழை எளிய மக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், திருநங்கைகள், தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்து வழங்கிவருகிறார்.
அந்த வகையில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு 100 பாதுகாப்பு கவச உடைகளை வழங்கினார். அதை மாவட்ட ஆட்சியர் சிவராசு பெற்றுக்கொண்டார்.
இது குறித்து மகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இதுவரை 15 டன் காய்கறி, 25 டன் அரிசி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆரம்ப சுகாதார நிலையம், துவாக்குடி மருத்துவமனை ஆகியவற்றிற்கு முகக்கவசம், சானிட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவு: எளிமையாக நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமணம்