திருச்சியில் இன்று டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரவுண்டானா திறப்பு விழா, குளிர்சாதன பயணிகள் நிழற்குடை திறப்பு விழா- மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உணவகம், கூடைப்பந்து மைதான திறப்பு விழா நடந்தது. இவற்றை திறந்துவைத்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பின்னர் செய்தியாளர்களிடம், ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி அனைத்து அமைச்சர்களும், அனைத்து தொண்டர்களும் வழி நடத்தப்படுகிறோம்.
வெற்றி, தோல்வி என்பது வீரனுக்கு சகஜம். தேர்தலில் வெற்றி அடைந்தபோது ஒரு மாதிரியும், தோல்வியடைந்தபோது ஒரு மாதிரியும் விமர்சனம் செய்வது சரியல்ல. ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆகிய இருவரது வழியில் நாங்கள் செல்வோம். தோல்வியைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை. ராஜன் செல்லப்பாவை யார் தூண்டி விடுகிறார்கள் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்றார்.