திருச்சி காஜாமியான் மேல்நிலைப்பள்ளியில் இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. ஏஆர்கே குரூப்ஸ் சமூக சேவை அமைப்பின் நிறுவனத் தலைவர் கலீல் ரகுமான் தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்டு 300 மாணவ மாணவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை மற்றும் உணவு பொருள்களை வழங்கினார்.
பின்னர் விழா மேடையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது, "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நடத்திய நல்லாட்சிக்கு இஸ்லாமியர்கள் பெரும் ஆதரவு அளித்தார்கள். தற்போது அவரது மறைவுக்குப் பின்னர் ஒன்றரை கோடி தொண்டர்கள் அதிமுகவை காத்து வருகின்றனர். சாதாரண தொண்டன் மிகப் பெரிய பதவிக்கு வந்தாலும், தனது நிலையிலிருந்து மாறுபடாமல் ஏழை மக்களுக்கு தேவையானவற்றை அறிந்து செயல்படக்கூடியவர்கள் இருக்கும் இயக்கம் அதிமுக.
தற்போது உயர்கல்விக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்கும் வகையில் செயல்பாடுகள் உள்ளன. சிறுபான்மையின மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிமுகவும், தமிழ்நாடு அரசும் தயாராக உள்ளன.
எம்ஜிஆர் காலம் முதல் இஸ்லாமியர்களுக்கு இரட்டை இலை சின்னம் மட்டும் தான் தெரியும். இதன் தொடர்ச்சியாக தான் அதிமுக இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்தது. எதிர்வரும் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியாக மூன்றாவது முறையும் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு இஸ்லாமியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எந்த தடையும் ஏற்படாது' - அமைச்சர் கடம்பூர் ராஜு