திருச்சி: திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்று திறனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு 56 மாற்று திறனாளிகளுக்கு ரூ.9,22,100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, “அறிவித்த தேதியில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் நடைபெறும். செய்முறை தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக ஏதுவாக அந்தந்த பள்ளிகளுக்கு ஏற்ற வகையில் அந்த தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி கொள்ளலாம்.
10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது தேர்தலைப் போன்றது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டி, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி நிரவல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக பணம் கொடுத்து வெற்றி பெறுவார்கள் என எதிர்க்கட்சிகள் பேசுவதிலிருந்து அவர்களின் தோல்வி பயம் இப்போதே தொடங்கி விட்டது என்பது தெரிகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாற்று திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "தமிழ்நாடு அரசு தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்வார்கள்": அமைச்சர் எல்.முருகன்