திருச்சி மாவட்டம் மேலபுலிவார்டு ரோடு இப்ராஹிம் பூங்கா அருகில் ஜமாத்துல் உலமா சபை, இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், அனைத்து மஹல்லா ஜமாத்துகள் ஒருங்கிணைந்து குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது ரூஹீல் ஹக் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் வேலுசாமி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜமாத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது ரூஹீல் ஹக், "குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியுள்ள மத்திய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். மக்களுக்கிடையே மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்தும் தனது தொடர் முயற்சிகளை பாஜக அரசு நிறுத்திக் கொள்ளவேண்டும். இல்லை என்றால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும்" என்றார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!