தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் போன்றவற்றில் அதிகளவில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கென உள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் தரகராக செயல்பட்டு வெளி மாநிலத்தவர்களை இங்கு பணியமர்த்த உதவி செய்துவருகின்றன.
குஜராத் உள்ளிட்ட தேசிய கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை பணியமர்த்த தடைச் சட்டம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இதற்கென பிரத்யேகச் சட்டம் இல்லை. இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியும் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியான திமுகவும் வலியுறுத்தவில்லை. அதனால் தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே அநாதையாக்கப்படும் நிலை உள்ளது.
இந்த வகையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 300 பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அங்கு அதிகளவில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டுமே உள்ளது.
அந்த வகையில் மீதமுள்ளவர்களை பொன்மலை பணிமனையில் இருந்து வெளியேற்றக் கோரி மே 3ஆம் தேதி பொன்மலை பணிமனை முன்பு மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் அரசியல் கட்சிகள் பாகுபாடின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்” என்றார்.