திருச்சி: மணப்பாறையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை முதல் நாள் குத்துவிளக்கு பூஜையுடன் தொடங்கிய சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூச்சொரிதல் விழா நடந்தது, அதில் பல்வேறு விதமான அலங்காரத்தில் அம்மன் தேர்பவனி உலா வந்தார்.
அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 30 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இந்த திருவிழா தொடர்ந்து தினமும் சாமி பல்லக்கில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் இன்று காலை 5 மணி முதல் அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் இருந்து கோயில் பரம்பரை அறங்காவலர் வீரமணி தலைமையில் புறப்பட்டது.
இதில், மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் மேளதாளங்கள், நாதஸ்வரம் முழங்க ராஜவீதிகளின் வழியாக சென்ற பால்குட ஊர்வலம் அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. மேலும் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் குழந்தை வரம் வேண்டியவர்கள் குழந்தை பாக்கியம் அடைந்ததால், கரும்புத்தொட்டில் கட்டிவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த திருவிழாவின் ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஆர்.வி.எஸ்.வீரமணி, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அழ.வைரவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். மேலும் இத்திருவிழாவையொட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையில் மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்தின் போது திடீரென வந்த ஆம்புலன்ஸ்க்கு பக்தர்கள் வழி ஏற்படுத்தினர்.