திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம், திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வரிசையில் மணப்பாறை முறுக்கும் தனிச்சிறப்பு பெற்றதாகும். மணப்பாறை பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் முறுக்கு முறுக்கு என கூவி விற்கும் குரலை கேட்காமல் இருக்கவே முடியாது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தயாராகும் முறுக்கு புகழ்பெற்று விளங்கி வருகிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் மணப்பாறை ரயில்நிலையத்தில் கிருஷ்ண ஐயர் என்பவர் மூலம் முறுக்கு தயாரிக்கப்பட்டு அன்றைய காலகட்டத்தில் சாரமாகக் கோர்த்து ரயிலில் மட்டும் நடைபெற்று வந்த முறுக்கு விற்பனை தொடர்ந்து, இன்று மணப்பாறை நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை தொழிலாக முறுக்கை தயாரித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
மணப்பாறை முறுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது அண்டை மாநில அளவிலும் புகழ் பெற்றுள்ளதோடு வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் வாங்கிச்செல்லப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசும், பலகாரமும்தான் முக்கியத்துவம் பெற்றது. பலகாரத்தில் முதன்மை பெற்று விளங்கும் முறுக்கு மணப்பாறை முறுக்காக இருந்தால் இன்னும் சிறப்புதான் என்பதால் மணப்பாறை முறுக்கை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
முறுக்கு தயார் செய்து கொடுக்க அதிகளவில் ஆர்டர்கள் வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேவேளையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு முறுக்கு தயாரிக்க தேவையான அரிசிமாவு, எண்ணெய் போன்ற மூலப்போருட்களின் ஜிஎஸ்டி-யால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ருசியும், தரமும் குறையாமல் கொடுப்பதால் தங்களுக்கு குறைந்த லாபமே கிடைப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும், தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் ஆடர்கள் கொடுத்தவர்களுக்கும் முறுக்கு தயாரித்து கொடுத்தோம். விலைவாசி உயர்ந்துவிட்டாலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கூலிமட்டும் கிடைத்தால் போதும் என தரமான முறுக்கு தயாரித்து கொடுப்பதாகக் கூறுகின்றனர்.
தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் முறுக்கு தொழிலையும், அதனை நம்பியுள்ள குடும்பங்களையும் காப்பாற்ற மானிய விலையில் மூலப்பொருட்கள் கிடைக்கவும், மூலப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி - வரி விதிப்பை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க:
'சாதாரண மக்களின் துயர் துடைக்க நம்மிடம் அறிவியல் இல்லை' - 'அறம்' பட இயக்குநர் வேதனை..!