மணப்பாறையில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு அறை குறித்து தலைமை மருத்துவர் கார்த்திகேயன் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டியளித்தார். அதில், "கொரோனா வைரஸால் யாரேனும் பாதிக்கப்பட்டால் சிகிச்சை அளிக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அறையில் 5 படுக்கை அறைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு 5 படுக்கை வசதிகள் உடன் மொபைல் எக்ஸ்ரே கிட் (PPT), தடுப்பு மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், குளுக்கோஸ் என அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். இது ஒரு சாதாரண நோய்க் கிருமி தான். இதற்காக யாரும் அச்சப்படத் தேவையில்லை. யாருக்கும் உயிர் போகக்கூடிய நிலை ஏற்படாது.
கொரோனா நோய்க் கிருமி பாதிப்பு வயதானவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மட்டும்தான் தாக்கத்தை அதிகமாக ஏற்படுத்தும். பிறருக்கு சளி, இருமல், தும்மல், காய்ச்சல், உடம்பு வலி என இது மாதிரியான அறிகுறிகள் இருப்பவர்கள், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்தால் பரிசோதனை செய்து உடனடியாக சிகிச்சை அளிப்போம்.
கொரோனா வைரஸ்: கர்நாடகாவில் மால், தியேட்டர் ஒரு வாரம் மூட உத்தரவு!
மேலும், அரசிடமிருந்து எங்களுக்காக பிபிடி என்று சொல்லக்கூடிய, சுய பாதுகாப்பு கிட் அளித்திருக்கிறார்கள். கொரோனா குறித்து சமூக வலைதளங்களில் பரவும் தவறான கருத்துகளை யாரும் நம்ப வேண்டாம். இந்த நோய் கிருமியானது, அம்மை போன்ற வியாதிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவ்வளவு பெரிய கொடிய நோயல்ல.
இது வரும்போது இரண்டு, மூன்று நாட்கள் காய்ச்சல் இருக்கும். மூன்று நாட்கள் கழித்து சரியாகிவிடும். மேலும், தனிப்பட்ட முறையில் அவரவர் தம் கைகளை அவ்வப்போது நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள். கூட்டமாக இருக்கும் இடத்தில் யாரும் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எங்களுக்கு ஏற்கெனவே இது போன்று டெங்கு காய்ச்சல், ஃபுளு காய்ச்சல் வந்தபோது அதனை எப்படி எதிர்கொள்வது என்று பயிற்சி அளித்திருக்கிறார்கள்" என்று கூறினார்.