திருச்சி: சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கான மாதிரி நீதிமன்ற போட்டி திருச்சி சட்டக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது,”தமிழ்நாட்டில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கான மாதிரி நீதிமன்ற போட்டி நடைபெற்றது. அதில் சிறப்பாக வழக்கை நடத்தி வாதாடியவர்களுக்குப் பரிசளிக்கப்படுகிறது.
இதில், 21 பேரை தேர்வு செய்து, வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வசதியாக, 30 லட்சம் ரூபாய் தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கிக் கொடுத்துள்ளார். சிறைத்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு தேவையான போது, விடுமுறை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களை ஒருபோதும் கட்டாயப்படுத்திப் பணி செய்ய வைப்பதில்லை.
மேலும் திருச்சி மத்திய சிறையை முழுமையான பாதுகாப்பான சிறையாக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. அதற்கான 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. இதே இடத்தில் சிறையை தொடர்ந்து செயல்படுத்துவதா? வேறு இடத்துக்கு மாற்றுவதா என்று அரசு ஆலோசித்துக் கொண்டுள்ளது.
இதற்கு அருகில், 292 ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுப்பதாகவும், அதில் புதிய சிறைச்சாலையை உருவாக்கிக் கொள்ளுங்கள், என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தற்போது புதிய சிறை உருவாக்கப்பட்டால், மகளிர் சிறையையும் அங்கே கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது.
முதலமைச்சரின் பரிசீலனையில் இருக்கும் அந்த திட்டத்தில், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சிறைத்துறை பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டிலும், முகாம் சிறை வருவாய்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கெளரிவாக்கம் நகைக்கடை கொள்ளை வழக்கு... 3 வடமாநில சிறார்கள் கைது...