திருச்சி: பிரதமர் மோடி இன்று (செப்.24) 9 வந்தே பாரத் ரயில் (Vande Bharat Express train) சேவையை துவக்கி வைத்தார். அதன்படி, நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட ரயிலில் பயணம் செய்த மத்திய இணை அமைச்சர் முருகன், திருச்சி வரை பயணம் மேற்கொண்டார். பின்னர் திருச்சியில் கொடி அசைத்து ரயிலை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாடு முழுவதும் 11 மாநிலங்கள் பயன் பெறும் வகையில், 9 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார். அதில் ஒன்று, தென் தமிழக மக்கள் பயன் பெறும் வகையில், நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.
துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் திருச்சி மக்கள் பயன் பெறும் வகையில் இயக்கப்பட்டிருக்கும் இந்த ரயிலால், நெல்லையில் இருந்து மொத்தம் எட்டு மணி நேரத்தில் சென்னைக்கு சென்றடையலாம். அதிநவீன வசதி கொண்ட அதிவேக ரயிலாக, பிரதமர் மோடி மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தபடி, ஏற்கனவே, சென்னை முதல் பெங்களூரு வழியாக, மைசூருக்கும், சென்னை முதல் கோவைக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று சென்னைக்கு இயக்கப்படும் 2 ரயில்களில், தற்போது நெல்லையில் இருந்து சென்னைக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இதன் வாயிலாக, ரயில்வே திட்டங்களில் தமிழகத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிதி ஆண்டில் தமிழகத்துக்கு மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில், தமிழக ரயில்வே துறைக்கு 5 ஆண்டுகளில் வெறும் 800 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தமிழகத்துக்கு 9 புதிய வழித்தடங்களில் ரயில்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அமிர் பாரத் திட்டத்தில் 800 கோடி ரூபாய் செலவில், எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது.
இது தவிர காட்பாடி, சேலம், கோவை, ரமேஸ்வரம், மதுரை, புதுச்சேரி, கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக மாற்றப்படுகின்றன. தலா 10 கோடி ரூபாய் செலவில் தமிழகம் முழுவதும் 75 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்திய தொழில் நுட்பத்தில், குறிப்பாக சென்னையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இங்கு தயாரிக்கப்படும் ரயில்களை, உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். 160 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயில் 110 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டுவதால், திருச்சியில் இருந்து 4 மணி நேரத்தில் சென்னைக்கு செல்ல முடியும். இப்பேதைக்கு இந்த ரயிலில், 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பதற்கான வாய்ப்பு குறைவு தான்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!