திருச்சி மத்திய மாவட்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கனிமொழி எம்பி கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பார்லிமென்டில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தொகுதிவாரியக மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
அதன் பிறகு தான், தேர்தலில் மகளிருக்கான இட ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று இட ஒதுக்கீடு மசோதாவில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. எப்போது கணக்கெடுப்பு தொடங்கும் என்பதில் தெளிவில்லை. கணக்கெடுப்பு எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பது போன்ற பல சர்ச்சைகள் இருக்கும் நிலையில், மறு சீரமைப்பும் செய்து முசோதாவை நடைமுறைப்படுத்த 10 ஆண்டுகளாகலாம், 30 ஆண்டுகளாகலாம். நேர வரையறை யாருக்கும் தெரியாது.
அதனால், அந்த இட ஒதுக்கீடு இந்த தேர்தலில் வருவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை. எந்த தேர்தலில் வரும் என்றும் தெரியவில்லை. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தாலும், எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது என்பதால், வெறும் கண்துடைப்பு தான். திமுக தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும், நாடாளுமன்ற வளாகத்திலேயே பெண் எம்பி-யை கொச்சையாக பேசி அச்சுறுத்துவது போன்ற செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத நிலையை தான் பார்க்க முடிகிறது. சுயமரியாதை காரணமாக, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுகவினர் பிரிந்து இருக்கின்றனர். எவ்வளவு நாள் அவர்களுக்கு உணர்வு இருக்கும் என்று தெரியவில்லை. மகளிருக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான், இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியது.
பெண்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு. தேர்தலில், கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு அடிப்படையில் முடிவு செய்யப்படும். நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. மனித குலத்துக்கே எதிராக மணிப்பூரில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை என சனாதன ஒழிப்பு, எதிரா என்ற கேள்விக்குப் பதிலளித்தார். 3 நாள்கள் மட்டுமே நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் எதைப்பற்றி பேசுவதற்கும் வாய்ப்பு கொடுக்கதில்லை. ஆனாலும், நியாயத்தின் பக்கம் தான் திமுக நிற்கும்” என்றார்.
இதையும் படிங்க: வெறும் கையால் கழிவநீர் வாய்க்காலில் தூய்மை பணி! அதிகாரிகள் கவனக்குறைவா? வீடியோ வைரல்!