மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்களை நோக்கி தலைமை செல்வதற்கான சூழல் தொடங்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாதது எங்கள் கட்சிக்கு பின்னடைவு இல்லை.
திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
மக்கள் வாக்களிக்க எங்கள் கட்சி பணம் அளிக்காது, நேர்மையாக இருப்பது எல்லா காலத்திலும் சாத்தியம்தான். விரும்புவர்கள் பின்பற்றலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை” என்றார்.
இதையடுத்து செய்தியாளர்கள் அவரிடம் தர்பார் படத்தில் சசிகலா பற்றிய விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, “அது பராசக்தி காலத்திலிருந்தே தொடர்கிறது என்பதால், அதைப் பற்றி கூறுவதற்கு ஒன்றும் இல்லை” என்றார்.
ரஜினி தமிழ்நாட்டில் முதலீடு செய்யவேண்டும் என்று கூறி உள்ளீர்களே, அதற்கு என்ன அர்த்தம் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ”உங்களிடம் சொல்லுவதைதான் அவரிடம் சொன்னேன். அவரை எங்களது கட்சியில் சேர சொல்லவில்லை. முயற்சியில் சேருங்கள் என்கிறேன்.
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், பணத்தை முதலீடு செய்வது என்று பொருள் அல்ல; நேர்மையையும் முதலீடு செய்யலாம். அதைத் தான் அவ்வாறு கூறினேன். அதற்கான முயற்சியில்தான் மக்கள் நீதி மய்யம் இறங்கியுள்ளது” என்றார்.
திமுக கூட்டணியில் சேருவது குறித்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த கமல், “2021ல் திராவிட கட்சிகளை தவிர்த்து பிற கட்சிகள் எங்களுடன் சேர்வதற்கு வாய்ப்புள்ளது. மக்கள் மனதில் தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. அதற்குத் தகுதியானவரை மக்கள் தேர்வுசெய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்றார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டிற்கு உதவ வேண்டிய கடமை ரஜினிக்கு உண்டு'