இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் வகாப் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பதைப் போல் புதிய கல்விக் கொள்கையை சீர்திருத்தம் செய்து தமிழ்நாட்டில் அமல்படுத்த முயற்சிக்கக் கூடாது.
மாப் லின்சிங் (mob lynching) செயல்களால் இதுவரை 272 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 247 பேர் இஸ்லாமியர்கள். எனவே தனி நபர் மீதான தாக்குதல்கள் பாஜக ஆட்சியில் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு அதிமுக அரசின் தோல்வி பயமே காரணம்' என்றார்.