திருச்சி: இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றானதும், இரக்கம், அன்பு, சகோதரத்துவத்தை உணர்த்தும் ரமலான் நோன்பை கடந்த மாதம் 3 ஆம் தேதி ரமலான் மாதத்தில் தொடங்கி கடைபிடித்து வந்தனர். இதையடுத்து 30 நாட்கள் நிறைவுபெற்று பிறை தென்படாத நிலையில், இன்று மே.3 ஆம் தேதி தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜியினால் அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் தங்களது நோன்பு முடிந்து இன்று ஈகைப் பெருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 2 ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று காரணமாக பெருந்திடல் தொழுகைகள் நடைபெறாத நிலையில், நடப்பு ஆண்டு தொற்று குறைந்திருப்பதால் திருச்சி சையது முர்துஷா மைதானத்தில் தமுமுக சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனியே தொழுகை நடைபெற்றது.
இதேபோல் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற தொழுகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டனர். மேலும் தங்களது நண்பர்களும், உறவினர்களும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மறைந்து ஜனநாயகம் மீண்டும் தழைத்தோங்க வேண்டும், கரோனா பெருந்தொற்று நீங்கி அனைவரும் இன்பமுடன் வாழவேண்டுமென இந்நாளில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தனர். ஈகைப்பெருநாளையொட்டி வறியவருக்கு உதவவேண்டும் என்ற நபிகளின் அறிவுரைக்கேற்ப ஏழை, எளியவர்களுக்கு உதவிகளும் வழங்கினர்.
இதேபோன்று திருச்சி மாநகரில் ஈத்கா மைதானம், ஜெய்லானியா பள்ளிவாசல், சவுக் பள்ளிவாசல் உள்ளிட்ட பிற பகுதிகளிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.