திருச்சி: ஐஆர்சிடிசி (IRCTC) பாரத் கெளரவ் சிறப்பு ரயில் சுற்றுலா குறித்து ஐஆர்சிடிசி பொது மேலாளர் ரவிகுமார், திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து இன்று (ஏப்ரல் 11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ரவிகுமார், “இந்தியன் ரயில்வேயின் சுற்றுலாப் பிரிவான ஐஆர்சிடிசி, சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ரயிலில் 4 குளிர் சாதனப் பெட்டிகள், 7 படுக்கை பெட்டிகள் (Sleeper Coaches), 1 பேண்ட்ரி கார் மற்றும் 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.
பாரத் கெளரவ் சுற்றுலா ரயிலின் முதல் ஓட்டத்தில், ஐஆர்சிடிசி தென் மண்டலம் அல்லது சென்னை சார்பில் ‘புண்ணிய தீர்த்த யாத்திரை’ என்ற பெயரில் சுற்றுப் பயணம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இந்தப் பயணம் சுற்றுலா செல்லும் மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த ரயிலில் மொத்தம் 750 பேர் பயணம் செய்யலாம். இதில் இதுவரை 500 பேர் பதிவு செய்துள்ளனர். எனவே 250 இடம் காலியாக உள்ளது. இந்த சுற்றுலாப் பயணம் வருகிற மே 4ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் மொத்தம் 11 நாட்கள் (12 இரவுகள்) பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தப் பயணத்தில் பூரி - கோனார்க் - கொல்கத்தா - சுயா - வாரணாசி - அயோத்தி - அலகாபாத் ஆகிய இடங்களைப் பார்க்கலாம். இந்தப் யணத்திற்கு கட்டணமாக படுக்கை வசதிக்கு 20 ஆயிரத்து 367 ரூபாயும், மூன்றாம் வகுப்பு குளிர் சாதன வகுப்புக்கு 35 ஆயிரத்து 651 ரூபாய் என வசதிக்கேற்ப கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
ஐஆர்சிடிசியின் பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலில் ஏராளமான முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, BAC வகுப்பு அல்லது 5U வகுப்பில் ரயில் பயணம் மேற்கொள்ளலாம். குளிர் சாதன வசதி அல்லது குளிர் சாதன வசதி அல்லாத (AC/ Non AC) தங்குமிடம் உண்டு. உள்ளூர் பார்வையிடுவதற்கான போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய சைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
தினமும் இரண்டு 1 லிட்டர் தண்ணீர் கேன் வழங்கப்படும் மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய வசதிகளும் உள்ளன. இந்தப் பயணத்தின்போது ரயில், கொச்சுவேலி, கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாக சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் மற்றும் விஜயவாடா ஆகிய வழித்தடங்கள் வழியாகச் செல்லும்.
எனவே ஐஆர்சிடிசி உடன் பாதுகாப்பாக பயணம் செய்து நன்மையைப் பெறுங்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் புது விதமான சுற்றுலாத் திட்டங்களை அமைக்க ஐஆர்சிடிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் இந்த சுற்றுலாப் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு ரயில்; தெற்கு ரயில்வே அறிவிப்பு!