திருச்சி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மதுபானங்கள் அனைத்தும் மூடப்படும் என அரசு அறிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் அரசின் உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில், கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் அலுவலகம் அருகே உள்ள ஒரு மதுபான கடை முன்பு, அரசு உத்தரவை மீறி இன்று (அக்.02) காலை முதல் மது விற்பனை நடைபெற்றது. அந்த பகுதிகளில் மது வாங்குவதற்காக மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து மது விற்பனை செய்த கண்ணன் உள்ளிட்ட இரண்டு நபர்களைக் கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக இருந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி காந்தி ஜெயந்தி நாளன்று, பட்டப்பகலில் மதுவிற்பனை செய்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இந்த மதுபான கடையில் இரவு 10 மணிக்கு மேலும், அரசு நிர்ணயம் செய்த மதுபான கடை விடுமுறை நாள் அன்றும், மது விற்பனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், நகரின் முக்கிய பகுதியில், இது போன்று பட்டப்பகலில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் முக சுழிப்பை ஏற்படுத்தியது. இனி வருங்காலத்தில் மது விற்பனைக்குத் தடை விதித்த நாட்களில், சட்ட விரோதமாக மதுபானம் விற்பதைத் தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.