திருச்சியில் 14 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்கோரி மாவட்ட மாநகர காவல் ஆணையரிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர்.
அதில் '140 ஆண்டுகள் வரலாறு காணாத வறட்சியை தமிழ்நாடு 2016ஆம் ஆண்டு சந்தித்தது. இதன் காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு இன்னும் நஷ்ட ஈடு வழங்கவில்லை. உச்ச நீதிமன்றமே அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நகை ஏலம், ஜப்தி நடவடிக்கைகள் நிறுத்திட வேண்டும்.
மேலும், வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாயமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும். காவிரியில் வரும் வெள்ள நீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம் மற்றும் காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும்.
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்தக்கோரியும், இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து பிரித்து தமிழ்நாட்டுடன் இணைத்து முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு தீர்வுக் காண வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு "மனுவில் குறிப்பிட்டக் கோரிக்கைகளை முன்நிறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க சென்றோம். ஆனால் அனுமதி தரவில்லை. எனவே திருச்சியில் தொடர் போராட்டம் நடத்த அனுமதி வேண்டி மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். அனுமதி வழங்காவிட்டால் தடையை மீறி முசலமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம்" என்றார்.
இதையும் படியுங்க: மத்திய அரசு பின்வாங்கும் வரை போராட்டம் தொடரும்: திருமா!