புதுக்கோட்டை மாவட்டம் தேங்காய்திண்ணிப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர் மணப்பாறையில் ஜோதி, கனகவள்ளி ஆகிய தனது இரு மனைவிகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கனகவள்ளியின் தோழியான அபிராமி என்பவர் அவர்களது வீட்டிற்கு வந்துள்ளார். பிற்பகலில் வீட்டில் அனைவரும் இருந்த நிலையில், அங்கு கருப்பு நிற காரில் அடையாளம் தெரியாத 4 நபர்கள் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து வீட்டில் புகுந்து அங்கிருந்த ரமேஷ் அவரது மனைவி ஜோதி ஆகியோரை அரிவாளால் வெட்டியும், ஜோதி கழுத்தில் இருந்த 5 சவரன் செயின் மற்றும் கையில் இருந்த செல்போன்களையும் பறித்தும் உள்ளனர்.
இதனையடுத்து வீட்டில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அங்கு வந்திருந்த அபிராமியை இழுத்து சென்று காரில் ஏற்றிக்கொண்டு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மணப்பாறை போலீசார், அரிவாள் வெட்டில் காயமடைந்த ரமேஷ் மற்றும் ஜோதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வந்தவர்கள் யார்? இளம்பெணை கடத்தியது ஏன்? செயின் பறிப்பு எதற்காக? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.