திருச்சி: ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் கோயில்களில் தரிசனம் செய்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினர் சிங்காரத்தோப்பு பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா சென்றதற்கு கருப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
பின்னர், திருச்சி சிங்கார தோப்புப் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அர்ஜுன் சம்பத்; ''தமிழ்நாட்டில் காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. மத்திய அரசு காய்கறி விலையை சரியான முறையில் வைத்து உள்ளது. ஆனால், மாநில அரசு அதனை செய்யத் தவறவிட்டது. இடைத்தரகர்களை வாழவைக்கும் அரசாக திமுக உள்ளது.
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்கு நிதி இல்லை. ஆனால் பொதுமக்கள் பணத்தில் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம், நூலகம், சிலைகள் எல்லாம் தேவை இல்லாத வீண்செலவு. தமிழ்நாட்டில் பல இடங்களில் ராஜராஜ சோழன், திருவள்ளுவர் உள்ளிட்டோரின் சிலைகளை வைக்க வேண்டும்.
மேலும், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது பல வழக்குகள் உள்ளன. இந்த குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
பாஜக அண்ணாமலை தலைமையில் “என் மண்... என் மக்கள்” என்ற பாதயாத்திரை நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி கலந்துகொள்கிறது. தருமபுரி எம்.பி. செந்தில்குமார் இந்து கடவுள்கள் பற்றி பேசியது மதக் கலவரத்தை தூண்டுவது போல் உள்ளது. அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்'' என்றார்.
மேலும், அமலாக்கத்துறை சோதனை மற்றும் ஆளுநர் செயல்பாடு ஆகியவை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுகவிற்கு அடித்தளமாக இருக்கும் தேர்தல் பிரசாரம் என தமிழ்நாடு முதலமைச்சர் கூறியுள்ளார் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு; செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பொழுது அமைச்சர்கள் எப்படி மருத்துவமனையைச் சுற்றி சுற்றி வந்தார்கள் என்பது நாம் அனைவரும் பார்த்த ஒன்று. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டவரை மருத்துவமனையில் சென்று முதலமைச்சர் நேரில் விசாரித்தார்.
இந்திய அரசியலில் முக்கியமான மாற்றங்களை கொண்டு வருவதற்கான கூட்டமாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இருக்கும் என வைகோ கூறியதற்கு பதில் அளித்த அவர் வைகோ தனி இயக்கத்தை நடத்தினால் இதுபோல் பேசுவாரா, காவிரி படுகை மக்களுக்கு கூட்டணி கட்சிக்காக திமுகவுடன் இணைந்து துரோகத்தை செய்கிறார்.
தனது மகனை அரசியலில் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் தனது மகனுக்கு ராஜ்யசபா பதவி வேண்டும் என்பதற்காகவும் இப்படி பேசி வருகிறார். இதற்கு வைகோ தான் வெட்கப்பட வேண்டும் மக்கள் இதை பார்த்து சிரிக்கிறார்கள் எனக் கூறினார், அர்ஜூன் சம்பத்.
இதையும் படிங்க:"எங்க வேலை ரொம்ப ஈஸி" - பொன்முடி வீட்டில் ED ரெய்டு குறித்த முதல்வர் கூலாக பேட்டி