திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தைச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமணி திறந்து வைத்தார். மேலும் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி, ஜெயங்கொண்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், ”திருச்சி தலைசிறந்த கல்வியை வழங்கிவரும் இடமாகவும், சரித்திரப் புகழ்பெற்ற இடமாகவும் திகழ்கிறது. திருச்சியில் அமைந்துள்ள நீதிமன்றம் மிகவும் பழமையானது மட்டுமல்லாமல் நல்ல திறமைகளை உருவாக்கிய பெருமை பெற்றது.
பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கிணங்க நீதிபதிகள் நல்ல தீர்ப்பை வழங்கவேண்டும். வழக்கறிஞர்கள் அரசியல் சட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களை அமைத்து மக்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் நீதி கிடைக்கச் சென்னை உயர்நீதிமன்றம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இளம் வழக்கறிஞர்கள் பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தாமல் மூத்த வழக்கறிஞர்களிடம் தொழில் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என கூறினார்.