திருச்சி: ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமியன்று காலை ஸ்ரீரங்கம் கோயில் உற்சவர் நம்பெருமாள், காவிரி அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். மதியம் வரை அங்கிருந்து பக்தர்களுக்கு அருள் புரியும் பெருமாள், மாலையில் ஆற்றுக்குள் எழுந்தருள்வார். அங்கு கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடக்கும். இவ்வகையில் இந்த ஆண்டுக்கான கஜேந்திர மோட்சம் இன்று (ஏப். 16) நடைபெற்றது.
இதற்கென உற்சவர் நம்பெருமாள், காலை 8.30 மணியளவில் கோயிலிலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு, மதியம் 12 மணியளவில் அம்மா மண்டபம் ஆஸ்தானம் சேர்ந்தார். அங்கு அவருக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. மாலை 5.30 மணிவரை அங்கிருந்து பக்தர்களுக்கு அருள் பிரிந்த நம்பெருமாள், 5.45 மணியளவில் பல்லக்கில் காவிரியாற்றுக்குள் சென்றார். 6 மணியளவில் பக்தர்கள் முன்னிலையில் கஜேந்திர மோட்சம் வைபவம் நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பரவசத்துடன் பெருமாளை சேவித்தனர்.
![gajendra moksham srirangam temple srirangam temple gajendra moksham கஜேந்திர மோட்சம் சித்ரா பௌர்ணமி விழா கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்த நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-03-srirangammahendramothamfestival-7210723_16042022184746_1604f_1650115066_1095.jpg)
சாபங்கள்: மன்னன் ஒருவன் பெருமாளை பூஜிக்கும்போது, ஆச்சாரக்குறைவு ஏற்பட்டதால் சாபத்துக்குள்ளாகி கஜேந்திரன் எனும் பெயரில் யானையாகப் பிறந்து காட்டில் வாழ்ந்து வந்தான். எனினும் தனது பூர்வ ஜென்ம புண்ணியத்தால், பகவான் மீதிருந்த பக்தி மாறாமல், சாப விமோசனம் வேண்டி, அன்றாடம் அருகில் உள்ள தாமரைத் தடாகத்திலிருந்து ஆயிரம் தாமரைப்பூக்கள் பறித்து காட்டுக்குள் இருந்த பெருமாள் விக்கிரகத்தில் இட்டு வழிபட்டு வந்தான்.
வான்வழியே தனது தோழியருடன் சென்ற கந்தர்வன் ஒருவன் அந்த தாமரைத் தடாகத்தைப் பார்த்து வியந்து குளிக்க ஆசைப்பட்டு தரையிறங்கினான். அங்கு தனது தோழியரோடு ஜலக்கிரீடை எனும் நீர் விளையாட்டில் ஈடுபட்டான். அதே தாமரைக் குளத்தின் மற்றொரு புறம் துர்வாச முனிவர் இடுப்பளவு நீருக்குள் நின்று தவமியற்றிக் கொண்டிருந்தார். அப்போது குளத்துநீரில் மூழ்கிக்குளித்த கந்தர்வன் தவறுதலாக முனிவரின் காலைப்பற்றி உள்ளுக்குள் இழுத்தான். பதறிப்போன முனிவர் தனது தவம் கலைந்ததால் கடும் அதிர்ச்சியடைந்தார்.
![gajendra moksham srirangam temple srirangam temple gajendra moksham கஜேந்திர மோட்சம் சித்ரா பௌர்ணமி விழா கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்த நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-03-srirangammahendramothamfestival-7210723_16042022184746_1604f_1650115066_51.jpg)
தவத்தை கலைத்தது யார் என்று பார்த்தபோது அது ஒரு கந்தர்வன் என்றும், அவன் பெண்களுடன் விளையாடும்போது தனது தவத்தை கலைத்துள்ளான் என்பதையும் அறிந்த முனிவர் கடும் கோம் கொண்டார். உடனே நீருக்குள்ளிருந்து நீ முதலைபோல் எனது காலைப்பிடித்து இழுத்ததனால் இன்று முதல் நீ முதலையாக வாழ்வாய் என்று சபித்துவிட்டார்.
பதறிப்போன கந்தர்வன் தான் அறியாமல் செய்த தவற்றுக்கு வருத்தி முனிவரிடம் மன்னிப்புக் கேட்டான். அதற்கு முனிவர் மறுத்துவிட்டார். உடனே கந்தர்வன் சாபவிமோசனம் எப்போது என்று கேட்டான். அதற்கு முனிவர் திருமாலின் சக்ராயுதம் உன் மீது பட்டால் உனக்கு விமோசனம் என்று கூறிவிட்டு முனிவர் சென்றுவிட்டார். கந்தர்வன் சிறிது நேரத்தில் ‘ஹூஹூ’ என்ற பெயருடன் முதலையாக மாறி அந்த குளத்திலேயே தனது சாப விமோசனத்திற்காக காத்திருந்தான்.
கஜேந்திர மோட்சம்: இந்நிலையில் ஒருநாள் வழக்கம்போல் கஜேந்திரன் பெருமாள் பூஜைக்கென தாரைப்பூக்கள் பறிக்க அந்த குளத்துக்கு வந்தது. யானை நீருக்குள் நின்றிருந்த நேரம் ஹூஹூவான முதலை தனக்கு உணவு கிடைத்துள்ளதாகக் கருதி கஜேந்திரனின் காலைப்பற்றி நீரின் ஆழமான பகுதிக்கு இழுக்க முயன்றது. யானை உயிர்பிழைக்க கடுமையாகப் போராடியது.
முதலைக்கு நீருக்குள் பலம் என்பதால் கஜேந்திரனால் முதலையிடமிருந்து தப்ப இயலவில்லை. தனது முயற்சி முழுவதும் தோற்று உடல் முழுதும் களைத்த நிலையில், அதற்கு இறைவன் நினைப்பு வந்தது. உடனே, பகவான் மகாவிஷ்ணுவை நினைத்து ‘ஆதிமூலமே’ என்று அபயக்குரல் கொடுத்தது.
கஜேந்திரனின் குரல் கேட்ட திருமால், கருடன் மீதேறி, அவசரமாக அங்கு வந்தார். வானிலிருந்தபடியே தனது சக்ராயுதத்தை ஹூஹூ முதலை மீது ஏவினார். சக்ராயுதம் முதலையின் கழுத்தில் வந்து இறங்கி முதலையைக் கொல்ல முயன்றது. உடனே முதலை யானையின் காலை விட்டது. யானை உயிர்பிழைத்து கரையேறியது.
போலீஸ் பாதுகாப்பு: இந்த நிகழ்ச்சியிலிருந்து அபயம் என்று குரல் கொடுக்கும் பக்தர்களை காக்க பரந்தாமன் பறந்தோடி வருவான் என்ற நியதி குறிப்பால் உணர்த்தப்படுகிறது. இவ்வாறு முதலைக்கு சாபவிமோசனம் கொடுத்து கஜேந்திரனுக்கு அருள்புரிந்த நிகழ்ச்சியே இன்று மாலை காவிரியாற்றுக்குள் விழாவாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருமாலின் இடத்தில் நம்பெருமாளும், கஜேந்திரன் இடத்தில் ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளும் இடம்பெற்றார்கள்.
![gajendra moksham srirangam temple srirangam temple gajendra moksham கஜேந்திர மோட்சம் சித்ரா பௌர்ணமி விழா கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்த நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15036408_gajendran.png)
நிகழ்ச்சியின்போது யானை ஆண்டாள் நீருக்குள் நின்று பிளிறுவதும், அப்போது நம்பெருமாள் அர்ச்சகர் யானைக்கு சடாரி வைத்து அருள்புரிவதும் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக அமைந்திருந்தன. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காவிரியாற்றுக்குள்ளும், அம்மா மண்டபம் படித்துறை பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை ரங்கநாதர் கோயில் நிர்வாக அலுவலர்களும், இணை ஆணையருமான மாரிமுத்து, உதவி நிர்வாக அதிகாரி கந்தசாமி ஆகியோர் தலைமையில் ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சகர்கள், கைங்கர்யபரர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழா - அரியலூரில் உள்ளூர் விடுமுறை!