திருச்சி: திருச்சியின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது, ஜீயபுரம் அருகே உள்ள முக்கொம்பு சுற்றுலாத்தலம். இந்நிலையில், 17 வயது சிறுமியும், அவரது காதலரும் நேற்று முன்தினம் (அக்.3) முக்கொம்பு சுற்றுலாப் பகுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கு இருவரும் சற்று மறைவான இடத்திற்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நான்கு காவலர்கள் அங்கு மது அருந்தி கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பகுதிக்கு வந்த இளைஞர் மற்றும் அந்த சிறுமியிடம் போலீசார் முதலில் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பின்னர், அந்த சிறுமியிடம் 4 போலீசாரும் அத்துமீறி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி, இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசுக்குச் சொந்தமான ரூ.200 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு!
புகாரின் அடிப்படையில் முசிறி மற்றும் திருவெறும்பூர் காவல் சரகத்தைச் சேர்ந்த துணை கண்காணிப்பாளர்கள் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். விசாரணையில், சிறுமிக்கு போலீசார் பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், பாலியல் தொல்லை கொடுத்த 4 போலீசார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். பின்னர், போலீசார் நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் மூதாட்டி அடித்துக் கொலை.. காலணியை வைத்து கொலையாளியை கைது செய்த போலீஸ்!