திருச்சி: தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 22) திருச்சி மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் திருச்சியில் மொத்தமுள்ள 65 இடங்களில், திமுக கூட்டணி 59 இடங்களைக் கைப்பற்றியது.
அதிமுக 3 இடங்களிலும், சுயேச்சை 2 இடங்களிலும், அமமுக 1 இடத்திலும் வெற்றியடைந்துள்ளது. பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் மன்றம் உள்ளிட்ட கட்சிகள் ஒரு வார்டில்கூட வெற்றிபெறவில்லை. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் துணை மேயர் சீனிவாசன் அதிமுக சார்பாக நின்று தோல்வியைச் சந்தித்தார்.
அதிமுகவின் முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இவரது மகன் ஜவஹர்லால் நேரு திருச்சியின் 20ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டிருந்தார். இவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் எல்ஐசி சங்கர் களமிறங்கியிருந்தார்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எல்ஐசி சங்கர் வெற்றிபெற்றதாகத் தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகன், உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளரிடத்தில் தோல்வியடைந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: வாக்கு எண்ணும் மையத்தில் மயங்கிவிழுந்த வேட்பாளரின் கணவர்