திருச்சி: கடந்த புதன்கிழமையன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தபோது அதிமுக தொண்டர்கள் அதிகளவில் கூட்டம் கூடினர். அப்போது, தமிழ்நாடு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதனால், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் நடராஜன், மாவட்ட செயலாளர் பரஞ்சோதி உள்ளிட்ட 100 பேர் மீது கரோனா பரவல் தடுப்புச்சட்டத்தின் கீழ், அதிகளவில் கூட்டம் கூடியது. அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியது ஆகியவற்றிற்கு திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (மார்ச் 18) சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் மூன்றாவது நாளாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர்கள் நடராஜன், வளர்மதி உள்ளிட்ட மூவர், ஆய்வாளர் சேரன் முன்னிலையில் கையெழுத்திட்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு போடப்பட்ட வழக்கில், தலைமை கழக நிர்வாகிகள் முக்கியமானவர்கள். தொண்டர்கள் வரும்போது எழுச்சியுடன் வரவேற்பது வழக்கம். நாங்கள் கட்டுப்பாடுடன்தான் நடந்து கொண்டோம்.
முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி 10ஆயிரம் பேரை கூட்டியபோது கரோனா ஏற்படவில்லையா?. தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அல்வா கொடுக்கும் பட்ஜெட். அதிமுக அரசின் திட்டங்களை லேபிள் ஒட்டும் அரசாக திமுக அரசு உள்ளது. ஆளுநரின் அதிகாரம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: அதிமுக உள்கட்சி தேர்தல் வழக்கு... ஓபிஎஸ், ஈபிஎஸ் பதிலளிக்க உத்தரவு...