திருச்சி: திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் திருவெறும்பூர் பகுதியில் பல இடங்களில் ஸ்வீட் கடைகளை வைத்து நடத்திவருகிறார். திருவெறும்பூர் ஜெய்நகர் பகுதியில் பேக்கரியுடன் இணைந்த ஸ்வீட் கடை இயங்கிவருகிறது. இங்கு, ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால், கடையில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். எண்ணெய் பலகாரங்கள், பேக்கரி பொருள்கள் இருந்ததால் கடையில் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. தீ விபத்து குறித்து உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், 45 நிமிடங்களுக்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள், பொருள்கள், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இனிப்புகள் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தன.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் காவல் துறையினர் தீ ஏற்பட்ட கடையைப் பார்வையிட்டனர். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தன் தாயுடன் திருமணம் மீறிய உறவில் இருந்த திமுக பிரமுகரைக் கொன்ற மகன் கைது