திருச்சி: திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பலரும் குடமுருட்டி ரயில்வே மேம்பாலம் அருகே ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்து வரும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விட பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் எனவும், டெல்டாவை பாலைவனமாக்கி பெட்ரோல், டீசல், மீத்தேன் போன்ற கனிம வளங்களை சுரண்டும் கார்ப்பரேட் கம்பெனியைக் கண்டித்தும், காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவையும் கண்டித்தும், தமிழகத்தில் உள்ள விவசாயிகளை காப்பாற்றுவதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக நூதன முறையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ரயில் மறியல் போராட்டத்தில், தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு கொடுக்கும் மின்சாரத்தை உடனடியாக துண்டிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது எனவும் விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி களையச் செய்தனர்.
முன்னதாக, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பந்த்தைக் கண்டித்தும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாதம் மாதம் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்காததைக் கண்டித்து, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா உருவப்படத்தை எரித்து, காவிரி ஆற்றில் கரைக்கும் இறுதிச் சடங்கும், காவிரியில் தண்ணீர் திறக்கும் வரை காவிரி ஆற்றுக்குள்ளே கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தப்படும் என காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் பலரும் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்பதற்கு ஏற்ப அரசாணை பிறப்பிக்க வேண்டும் - தமிழ்நாடு பதிவுத்துறை ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை!