திருச்சி: தமிழ்நாட்டில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதிகளில் காவிரியை நீர் ஆதாரமாகக் கொண்டு நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை 220 நாட்களுக்கு, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அதாவது டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். அணைக்கு நேற்று மாலை தண்ணீர் வரத்து விநாடிக்கு 892 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று அதிகாலை 3 மணியளவில் கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையை வந்தடைந்தது. இந்த நிலையில், காவிரி நீரானது இன்று நள்ளிரவு 12 மணியளவில் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. இதையடுத்து கல்லணையிலிருந்து பாசனத்துக்காக நாளை (ஜூன்.16) தண்ணீர் திறக்கப்படுகிறது.
தற்போது முக்கொம்புக்கு தண்ணீர் வரத்து காலை 6 மணியளவில் விநாடிக்கு 2,000 கன அடியாக இருந்தது. மேலும் இந்த தண்ணீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. முக்கொம்பு வந்த தண்ணீரை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் படையல் வைத்து, தேங்காய் உடைத்து, மலர்த் தூவி நெற்களை தூவி வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து கடைமடைக்கு காவிரி நீர் சென்று அடையும் அளவிற்கு மீதமுள்ள தூர் வாரும் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும். கல்லணையில் நீர் திறந்து விடுவது அரசு விழாவாக கடைப்பிடிப்பது போல் காவிரி, கொள்ளிடம் பிரியும் முக்கொம்பிலும் தண்ணீரை திறப்பை அரசு விழாவாக கொண்டாட விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருச்சி மாவட்டத்தில் குறுவை சாகுபடி 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முசிறி, லால்குடி பகுதிகளில் மட்டுமே நடவு பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர். தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரும் பணியை அரசு அதிகாரிகள் முடுக்கிவிட வேண்டும் எனவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பாகுபாடின்றி கடன் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் பாகுபாடின்றி கடன் வழங்க வேண்டும் என விவசாயிகளால் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் கடந்த சில மாதங்களாக வறண்டு காணப்பட்ட காவிரியில் தண்ணீர் பெருக்கெடுப்பதை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.