திருச்சி: மக்களவையில் ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் இன்று (ஜூன் 26) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டுவந்தனர்.
அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், அவ்விடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு கொடுத்தனர்.
அப்போது அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“கடந்த 210 நாள்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். மரபணு மாற்றப்பட்ட விதைகளால் இளைஞர்கள் ஆண்மைத்தன்மையை இழக்கின்றனர். இளம் பெண்கள் கருத்தரிக்க முடியாத நிலைமை ஏற்படுகிறது.
இதுபோன்ற சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.
இச்சட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் எதிர்க்கிறார். அதனால் நாங்கள் டெல்லி சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் காவல் துறையினர் மறுப்பு தெரிவித்துவருகின்றனர்.
நாட்டில் மொத்தம் 90 கோடி பேர் விவசாயிகள் உள்ளனர். இதில் 88 கோடி பேர் இந்துக்கள். இந்துக்களின் வாக்குகள் மோடிக்கு கிடைக்க வேண்டும் என்றால் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
மேலும் இதனை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனு ஆளுநர் மூலமாக டெல்லிக்கு அனுப்பிவைக்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராவோம்! - புதிய நிர்வாகிகளுக்கு கமல் ஊக்கம்