திருச்சி மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டியைச் சேர்ந்தவர் நாகப்பன்(47). இவர் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமான லாரி ஒன்று ஆலை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை டிரைவர் மற்றும் உதவியாளர்கள் சாப்பிட சென்றுள்ளனர். அதனால் அரிசி ஆலையில் கணக்குப் பிள்ளை குமார் மட்டும் இருந்துள்ளார்.
அப்போது லாரி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதையறிந்த குமார், டிரைவர் சாப்பிட சென்றிருக்கும் நிலையில் யார் லாரியை எடுத்துச் செல்வது என்று பார்க்க தன்னுடைய இருசக்கர வாகனத்தில் லாரியை பின்தொடர்ந்துள்ளார். திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமார் லாரியை முந்திச் சென்று பார்த்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் லாரியை திருடி செல்வது தெரியவந்துள்ளது.
இதையடுத்து லாரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமுத்திரம் வழியாக கிராம சாலையில் சென்றதை பார்த்த கணக்குப் பிள்ளை குமார், சமுத்திரம் ரயில்வே கேட்டை லாரி கடந்து செல்ல முயன்றபோது தன்னுடைய இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு லாரியின் பின்பகுதியில் ஏறிக்கொண்டு உயிரை கையில் பிடித்தபடி தன்னுடைய ஆலை உரிமையாளருக்கும் நண்பர்களுக்கு தகவல் கொடுத்ததோடு, லாரி செல்லும் வழியை தொடர்ந்து கூறிவந்துள்ளார்.
தொடர்ந்து, லாரி உரிமையாளர் மற்றும் இளைஞர்கள் காரில் ஏறி அந்த லாரியை பிடிக்க பின் தொடர்ந்தனர். ஆனால் லாரி மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்குச் சென்று திருச்சி நோக்கி சென்றுள்ளது. அப்போது விராலிமலை சுங்கச்சாவடியில் லாரியை நிறுத்திதான் ஆக வேண்டும் என்ற நிலையில் திருடர்கள் லாரியை நிறுத்துவார்கள் என்று பின்தொடர்ந்தவர்கள் நினைக்க சுங்கச்சாவடி தடுப்பையும் உடைத்துக் கொண்டு லாரி வேகமாக சென்றுள்ளது.
உடனடியாக இதுதொடர்பாக மணிகண்டம் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல் துறையினர் தயார் நிலையில் நின்று எதிரே வந்த லாரியை தடுத்து நிறுத்தவே, காவலர்களை கண்டதும் லாரியை நிறுத்தியவர்கள் மீண்டும் லாரியை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.
மீண்டும் லாரியை காவலர்களும், இளைஞர்களும் கார் மற்றும் ஜீப்பில் துரத்திச் சென்றனர். ஒருவழியாக சுமார் 60 கிலோ மீட்டர் பயணத்துக்கு திருச்சி காந்தி மார்க்கெட் அருகே சென்றபோது போக்குவரத்து நெருக்கடி ஏற்படவே லாரி நிறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் அவர்களை காவல் துறையினர் பிடித்தனர். தொடர்ந்து லாரியைக் கடத்திய ஆசாமியையும், லாரியையும் மணப்பாறை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் பிடிபட்ட நபரிடம் காவலர்கள் விசாரித்தபோது அவர் விருதுநகரைச் சேர்ந்த பிச்சைமணி(43) என்று கூறியதோடு தகவல்களை முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளார். அவரிடம் மணப்பாறை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மலைப்பாதையில் அனுமதியின்றி வந்த 14 சக்கர லாரி பறிமுதல்!